ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1¾ கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1¾ கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது, அதிகமான பரிசு பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதலே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி- குன்னூர் சாலை எல்லநள்ளி சந்திப்பு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மேட்டுப்பாளையம் காந்திநகரை சேர்ந்த டேவிட் பால்ராஜ் என்பவர் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 910 ரொக்கம் இருந்தது. பின்னர் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலிவியூ பகுதியில் நடத்திய வாகன சோதனையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்து கணேசன் என்பவர் வாகனத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ஆனந்தகுமார் காரை சோதனை நடத்தி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் சாலை பிங்கர்போஸ்ட், ஊட்டி-குன்னூர் சாலை லவ்டேல் சந்திப்பு, ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பு அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு காரின் முன்பகுதியில் அரசியல் கட்சி கொடி பறந்து கொண்டு இருந்தது. பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கட்சி கொடியை அகற்றுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து வாகன ஓட்டுனர் அந்த கட்சி கொடியை அகற்றினார்.
காலையில் 2 பேரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலையில் ஊட்டி-கூடலூர் சாலை அத்திக்கல் சந்திப்பு பகுதியில் வந்த வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் கட்டுக்கட்டாக பணம் பெட்டியில் இருந்தது தெரியவந்தது. இந்த பெட்டியை ஏஜென்சி அதிகாரிகள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அந்த வாகனம் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் மகேந்திரன் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டது. இதில் ரூ.73 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கான ஆவணங்களை வாகனத்தில் வந்தவர்கள் கொண்டு வரவில்லை. தனியார் ஏஜென்சி நீலகிரி மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 96 லட்சம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப கொண்டு வந்ததாகவும், மற்ற இடங்களில் பணம் நிரப்பி விட்டு ஊட்டியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப வந்த போது சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. ஊட்டியில் கடந்த 2 நாட்கள் நடந்த வாகன சோதனையில் ரூ.81 லட்சத்து 48 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
காங்கேயம்- தாராபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. காரை ஓட்டி வந்தது ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த நூற்பாலை அதிபர் சந்தோஷ் என்பது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே நடந்த வாகன சோதனையில் தர்மபுரியை சேர்ந்த சோப்பு வியாபாரி முகமது ரபீக் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500 சிக்கியது. மேலும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 246 சில்வர் பாத்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் நடந்த சோதனையில் தர்மபுரி மாவட்டம் எஸ்.கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சமும், பெரம்பலூர் பகுதியை சேர்ந்த மினரல் வாட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் காரல் மார்க்ஸ் என்பவரிடம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 200 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் பகுதியில் காரில் வந்த சிவியாம்பாளையத்தை சேர்ந்த நாவல் ஆனந்த் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், வீட்டில் இருந்து நிதி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கான ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் நடந்த வாகன சோதனையில் அந்தோணி நவீன் என்பவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாயும், திருச்சி வயலூர் ரோட்டில் ரெங்காநகர் சோதனைச்சாவடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கருணாகரனிடம் ரூ.1 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான 8 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.
தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்த மாணவர்கள் 2 பேரிடம் ரூ.1 லட்சம் சிக்கியது.
இது குறித்து மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தனியார் கல்லூரி ஒன்றில் சேருவதற்காக கட்டணமாக செலுத்த அந்த பணத்தை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினர். மேலும் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காட்டியதால் பணத்தை பறிமுதல் செய்யாமல் மாணவர்களிடமே, அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
நெல்லையில் இருந்து பாவூர்சத்திரத்துக்கு சென்ற காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.68 லட்சத்து 14 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்தவர் பாளையங்கோட்டை சேவியர் காலனியைச் சேர்ந்த அந்தோணி சேவியர் என்பதும், பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தாளாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.68 லட்சத்து 14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு அருகே நேற்று மதியம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனில் 2 ஆயிரம் சேலைகள் பிடிபட்டது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூர் கைகாட்டி என்கிற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்குமார் (46) என்பவர் தனது மகன் ஆகாசுடன் சென்னையை நோக்கி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் உரிய ஆணவங்கள் இன்றி இருந்த 11 லட்சத்து 63 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.1¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story