‘உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்’ கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் அன்பு செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சந்தோசினி சந்திரா, நேர்முக உதவியாளர்(கணக்கு) விநாயகம் பிள்ளை மற்றும் அதிகாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற உரிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும், இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள் எங்கும் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் அறை அல்லது மண்டபத்தின் உள்ளே, பொதுக்கூட்ட மேடைகளில் மட்டும் ஒரே ஒரு விளம்பர பேனர் வைத்துக்கொள்ளலாம். தடையை மீறி விளம்பர பேனர்கள் வைத்தால் ஊரக பகுதிகளில் மட்டும் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளரின் அனுமதிபெற்று சுவர் விளம்பரம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., தி.மு.க., காங்கிரஸ், த.வா.க., வி.சி.க., அ.ம.மு.க., திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து அனைத்து வியாபாரிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசியதாவது:-
வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேலாக பணத்தை எடுத்து சென்றாலோ, ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றாலோ அவை பறிமுதல் செய்யப்படும். அதேபோல் உரிய ஆவணத்துடன் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்து சென்றாலும் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
மேலும் உங்கள் கடைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒருவர் பொருட்களை வாங்குகிறார் என்றால் அந்த பொருளை அவர் எதற்காக வாங்குகிறார் என்பதை கண்காணிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உரிய அனுமதி இல்லாமல் சுவரொட்டிகள், நோட்டீசுகள் ஆகியவற்றை அச்சக உரிமையாளர்கள் அச்சடிக்க கூடாது. அச்சடிக்க வரும்நபருடன் அந்த நபருக்கு அறிமுகமான 2 நபர்களிடம் அத்தாட்சி பெற வேண்டும். அச்சடிக்கும் சுவரொட்டிகள், நோட்டீசுகளில் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும். சுவரொட்டிகள் மற்றும் நோட்டீசின் நகலை அச்சக உரிமையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வேட்பாளருக்கு தெரியாமல் அவரது பெயரை சுவரொட்டிகள், நோட்டீசுகளில் அச்சடித்தால் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபரை விமர்சனம் செய்யும் வாசகம் இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. 63 அதிகாரிகள், 189 காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை கொண்ட பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணித்து வருகிறார்கள். திட்டக்குடியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய அனுமதி இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.11 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்தளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களை முதல் கட்ட சோதனை முடித்து தேர்தலுக்கு பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story