மதுரை-சென்னை சொகுசு ரெயில் தேஜஸ் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
மதுரை-சென்னை தேஜஸ் சொகுசு ரெயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், பயண கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன தேஜஸ் சொகுசு ரெயில் கடந்த 1-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதுரை உள்பட தென்மாவட்ட பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரெயில் முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. இந்த ரெயில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். கடந்த 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தேஜஸ் ரெயிலுக்கு முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
கடந்த 2-ந்தேதி சென்னையில் இருந்து மதுரை வந்த ரெயிலில்(வ.எண்.22671) எக்சிகியூடிவ் வகுப்பில் 21 பேரும், சேர்கார் வகுப்பில் 436 பேரும் முன்பதிவு செய்திருந்தனர். மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில்(வ.எண்.22672) எக்சிகியூடிவ் வகுப்புக்கு 24 பேரும், சேர்கார் வகுப்புக்கு 201 பயணிகளும் முன்பதிவு செய்திருந்தனர். 3-ந் தேதி சென்னையில் இருந்து முறையே 38 மற்றும் 705 பேரும், மதுரையில் இருந்து முறையே 57 மற்றும் 935 பேரும், 4-ந் தேதி சென்னையில் இருந்து முறையே 47 மற்றும் 677 பேரும், மதுரையில் இருந்து 43 மற்றும் 492 பேரும், 5-ந் தேதி சென்னையில் இருந்து முறையே 25 மற்றும் 593 பேரும், மதுரையில் இருந்து 56 மற்றும் 837 பேரும், 6-ந் தேதி சென்னையில் இருந்து முறையே 25 மற்றும் 292, மதுரையில் இருந்து 40 மற்றும் 496 பேரும் என பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரெயிலுக்கு வரவேற்பு அதிக அளவு உள்ளது. ரெயிலில், எக்சிகியூடிவ் வகுப்பில் 56 இருக்கைகளும், சேர்கார் வகுப்பில் 936 இருக்கைகளும் உள்ளன. இதற்கு உணவுடன் எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.2,295 மற்றும் சேர்கார் வகுப்புக்கு ரூ.1,195 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உணவு இல்லாமல் முறையே ரூ.1,940, ரூ.895 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உணவு தேவைப்படுபவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தி விடலாம். ரெயிலுக்குள்ளும் தனியாக கட்டணம் செலுத்தி உணவு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு சில பயணிகள் 4 பேருக்கு முன்பதிவு செய்து விட்டு, அதில் 2 பேருக்கும் மட்டும் உணவுக்கான கட்டணத்தை செலுத்துகின்றனர். ரெயிலுக்குள் 4 பேருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அதேபோல, ரெயிலுக்குள் வழங்கப்படும் உணவின் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. ரெயில் பெட்டிகளின் கதவுகள் தானாக திறந்து, மூடும் வகையில் இருப்பதில் சில பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த ரெயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story