வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் சப்ளையா? உணவு பொருட்களை எடுத்து செல்பவர்களிடம் போலீசார் சோதனை
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறதா? என்பது குறித்து உணவு பொருட்களை எடுத்து செல்பவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தை கடந்து மதுபான விற்பனை, கடத்தல் போன்றவை நடைபெறுகிறதா? என்பது குறித்தும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக இந்த தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு அதிக அளவில் சப்ளை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதை தடுக்க தேர்தல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் ஆன்லைன் மூலம் உணவு வேண்டி பதிவு செய்பவர்களுக்கு உணவு சப்ளை செய்யும் தனியார் நிறுவன ஊழியர்களை மடக்கி போலீசார் சோதனை நடத்தினார்கள். போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் சுமந்து செல்லும் பைகளை சோதனையிட்ட போலீசார் அதில் உணவு பொருட்கள் தவிர வேறு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். மேலும் ஊழியர்களின் அடையாள அட்டை, லைசென்சு போன்றவற்றையும் வாங்கி பார்த்தனர். உணவு பொருட்கள் தவிர வேறு எந்தவித பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் கோரிமேடு எல்லைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவையிலிருந்து வெளியே செல்லும் வாகனங்களையும், புதுவைக்கு வரும் வாகனங்களையும் மடக்கி அவர்கள் சோதனையிட்டனர். குறிப்பாக பணம், பரிசுப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? என்பதை கண்டறியும் விதமாக இந்த சோதனை நடந்தது. இதேபோல் நாள்தோறும் அதிரடி சோதனைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story