சத்திரப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


சத்திரப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 14 March 2019 3:00 AM IST (Updated: 14 March 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் சமுசிகாபுரம் பகுதிகளில் இயங்கும் விசைத்தறி கூடங்களில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் 5 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இதை நம்பி சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், பாவு ஓட்டுதல், சாயப்பட்டறை, கண்டு போடுபவர்கள் என 6 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப்படும். கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 100 மீட்டர் துணி உற்பத்திக்கு ரூ.76-ம், கடந்த ஆண்டு ரூ.82-ம், இந்த ஆண்டு ரூ.87-ம் என முடிவு செய்யப்பட்டது. கடந்த வருடம் ஒப்பந்தப்படி 3-வது வருட கூலி உயர்வு என்பது முழுமையாக இன்னும் அமல்படுத்தப்படவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 3 ஆண்டு கால ஒப்பந்தம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி முடிவடைய உள்ளது. எனவே புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கோரி தொழிற்சங்கத்தினர் கடந்த மாதம் மருத்துவ துணி உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர்.

ஆனால் இவர்களின் கோரிக்கையின்படி இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து சங்கரபாண்டியபுரத்தில் தொழிலாளர் மகாசபை கூட்டம் நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூலி உயர்வு ஒப்பந்தம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் அளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.7½ லட்சம் வரை தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் தலையிட்டு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story