சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு


சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2019 9:30 PM GMT (Updated: 13 March 2019 11:12 PM GMT)

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காரைக்குடி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம், மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதேபோல் காலியாக உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் 18-ந்தேதி நடைபெற உள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகள் காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரிக்குச் சென்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், இட வசதி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

வாக்கு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், ஏஜெண்டுகள் அமரும் இடம், பத்திரிகையாளர்களுக்கான இடம் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட வருவாய் அதிகாரி லதா, கோட்டாட்சியர் ஈஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மற்றும் தாசில்தார்கள் உடனிருந்தனர்.

Next Story