ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்டான்லி ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிராட்வே,
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பெண்கள் தைரியமாக செயல்படவேண்டும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தியும் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் டீன் அலுவலகம் அருகே இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து, பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது மாநில அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல் சென்னை ஓட்டேரி பாலம் அருகே நேற்று மாலை அனைத்திந்திய பெருமன்ற இளைஞர் கூட்டமைப்பு மற்றும் தேசிய சம்மேளன மாதர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 50 பேர் நேற்று காலை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story