பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து உடுமலை, திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து உடுமலை, திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2019 4:30 AM IST (Updated: 15 March 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து உடுமலை, திருப்பூரில் நேற்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச வீடியோக்கள் எடுத்து அவர்களை மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பல பெண்களும், கல்லூரி மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரியும் உடுமலையில் உள்ள ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரிக்கு முன்பு பழனி சாலையில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்து பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் சாலை மறியலில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகள் திடீரென்று எழுந்து உடுமலை பஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த பகுதியில் சாலையில் போலீசார் தடுப்புகளை வைத்தனர். அத்துடன் மாணவிகள் அந்த இடத்தில் இருந்து முன்னேறி வராத வகையில் கயிற்றை பிடித்து நின்றனர். சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், வாகனங்கள் நீண்ட தூரம் காத்து நின்றிருந்தன.

இதைத்தொடர்ந்து அதன்பிறகு கனரக வாகனங்கள் மாற்று வழியாக திருப்பி விடப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடம் இந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியைகள் சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக மத்திய பஸ்நிலையம் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

மறியல் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து உடுமலை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மாணவிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

மத்திய பஸ்நிலையம் பகுதிக்கு காலை 11 மணிக்கு வந்து சேர்ந்த மாணவிகள் அங்கும் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கும் மாணவிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிது நேரத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகசாமி அங்கு வந்து மாணவிகளிடம் பேசினார். அப்போது “சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களோ, அதை மனுவாக எழுதிக்கொடுங்கள். உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவிகளிடம் பேசி சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் மதியம் 12.20 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு மாணவிகள் கலைந்துசென்றனர். அப்போது ஒரு மாணவி திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இந்த சாலைமறியலால் உடுமலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் உடுமலை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 2-வது நாளாக இதே சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் நுழைவு வாயிலின் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் சுமார் 11 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ராமையா கூறும் போது, மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடப்பதால் பெரும்பாலான மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

Next Story