மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது + "||" + Vellore district SSLC exam Started

வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வை மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
வேலூர்,

தமிழகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 354 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 227 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இத்தேர்வு வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வுக்கு தேவையான அனைத்து பணிகளையும் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. தேர்வு நடைபெறும் பள்ளிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 250 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு மொழி பாடங்கள் தேர்வு பிற்பகலில் நடத்த முடிவு செய்து, அதன்படி நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி சென்றனர். செல்லும் வழியில் இருந்த விநாயகர் கோவில்களில் மாணவர்கள் நின்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரத்தடியில் கூட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் தங்களது சந்தேகங்களை கடைசி நேரம் வரை கேட்டு தெரிந்து கொண்டனர்.

தேர்வு மையத்துக்கு அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை கொண்டு வர வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வேலூர் அலமேலுமங்காபுரம் ஆதி திராவிடர் நலப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.