அபிராமம் அருகே குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அபிராமம் அருகே குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி,
கமுதியை அடுத்துள்ள அபிராமம் அருகே காட்டு எமனேஸ்வரத்தில் 80 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அவ்வப்போது புழக்கத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீரும் கடந்த சில வாரங்களாக வராததால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வழிமறிச்சான் தனியார் ஆழ்குழாயில் உவர்ப்பு நீரை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் தள்ளுவண்டிகளை எடுத்துக்கொண்டு தண்ணீர் தேடி அலையும் அவலம் உள்ளது. இதுகுறித்து காட்டுஎமனேஸ்வரம் கிராம மக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்ததன்பேரில் 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் வசதியுடன் குழாயும் அமைக்கப்பட்டது. ஆனால் இதன் மூலம் 500 லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
வேறு வழியின்றி இப்பகுதி மக்கள் குடிநீருக்காக வழிமறிச்சான் விலக்கு ரோட்டிற்கு சென்று அங்கு சாலையோரம் குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை சேகரித்து வந்து 10 நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி நேற்று காலை 10.45 மணி முதல் மதியம் 12 மணி வரை கமுதியில் இருந்து அபிராமம், பார்த்திபனூர் வழியாக மதுரை செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கமுதி யூனியன் அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் அங்கு வந்த அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி பொதுமக்களை சமரசம் செய்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story