திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14½ லட்சம் மோசடி செய்தவர் கைது மனைவி, மகள்கள் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு


திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14½ லட்சம் மோசடி செய்தவர் கைது மனைவி, மகள்கள் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 March 2019 10:08 PM GMT (Updated: 16 March 2019 10:08 PM GMT)

திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கூளூர் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் தனது சகோதரருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என முயற்சி செய்தார். வேலூர் கும்மினிப்பேட்டையை சேர்ந்த ரியல்எஸ்டெட் தரகர் மூர்த்தி(58) என்பவர், தனது உறவினர்கள் தமிழ்நாடு மின்வாரியத்திலும், சென்னை தலைமைச்செயலகத்திலும் பணிபுரிந்து வருவதாகவும், சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும் செல்வத்திடம் கூறியுள்ளார். அவர்கள் மூலமாக மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் சதீஷ்குமார், திருநாவுக்கரசு, கவுதமி ஆகியோர் மொத்தம் ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்தை மூர்த்தியிடம் கொடுத்தனர்.

மூர்த்திக்கு உடந்தையாக அவரது மனைவி சின்னபொண்ணு, மகள்கள் சுபேத்தா, மனுஸ்ஷா, நண்பர் குகன் மற்றும் சரவணன், குமார், குகனின் மனைவி திரிபுரசுந்தரி ஆகிய 7 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது.

கைது

அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு 3 மாதத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அனைவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி. கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், வாசுதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரக்கோணத்தில் பதுங்கி இருந்த மூர்த்தியை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சின்னபொண்ணு உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story