பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2019 5:39 AM IST (Updated: 17 March 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து புதுவையில் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் சூப்பிரண்டு, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், வழக்கினை நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் கண்டன உரையாற்றினார். அரசியல் குழு துணை செயலாளர் முன்னவன், தலைமை நிலைய செயலாளர் செல்வ.நந்தன், மகளிர் விடுதலை இயக்க செயலாளர் லட்சுமி, நிர்வாகிகள் முருகமதி, மாலா, பாத்திமா பீவி, விமலா, அகிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இறைவி என்ற அமைப்பு சார்பில் புதுவை சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் காயத்ரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.

Next Story