கோத்தகிரி அருகே, அட்டகாசம் செய்து வரும் கரடிகளை பிடிக்க கூண்டு - வனத்துறையினர் நடவடிக்கை


கோத்தகிரி அருகே, அட்டகாசம் செய்து வரும் கரடிகளை பிடிக்க கூண்டு - வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 7:55 PM GMT)

கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி, சன்ஷைன் நகர், கஸ்தூரிபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மூன்று கரடிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எஸ்.கைகாட்டி பகுதியில் கடந்த இரு மாதத்திற்கு முன் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான பேக்கரியின் கதவை உடைத்து மூன்று முறை உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த பண்டங்களையும், பொருட்களையும் சேதப்படுத்தின.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு எஸ்.கைகாட்டி பகுதியில், கோடநாடு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள கக்குளா மாரியம்மன் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் அங்குள்ள பொருட்களை வீசிவிட்டு சென்றன. மேலும் விளக்குகளில் இருந்த எண்ணெயையும் குடித்து விட்டு சென்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கரடிகள் தாக்கி பொதுமக்களுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் முருகன், தருமன், வீரமணி மற்றும் வினோத் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், கரடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இப்பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று மாலை கோத்தகிரியில் இருந்து கரடிகளை பிடிப்பதற்காக கூண்டு கொண்டு வரப்பட்டு எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள கோவில் அருகே வைக்கப்பட்டது. இந்த கூண்டிற்குள் கரடிகளுக்கு பிடித்த பழ வகைகள், தேன் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், எஸ்.கைகாட்டி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக கூண்டு வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரடிகள் பிடிபட்டவுடன் அவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் கரடிகள் பிடிபடும் என நம்புவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

Next Story