மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் அண்ணன் கண்எதிரே என்ஜினீயரிங் மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் அண்ணன் கண்எதிரே என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 22 March 2019 3:00 AM IST (Updated: 22 March 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்எதிரேயே என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம்,

அம்பத்தூர் பழைய நகராட்சி சாலையை சேர்ந்தவர் மோகன்குமார். இவருடைய மகன்கள் ராகுல்(வயது 18), கவுதம்(17).

ராகுல், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. சோசியாலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கவுதம், மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அண்ணன்-தம்பி இருவரும் நேற்று காலை செங்குன்றத்தில் இருந்து மூலக்கடை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மாதவரம் மேம்பாலம் அருகே சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த கவுதம் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கவுதம், அண்ணன் கண்எதிரேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ராகுல், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் பலியான கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story