ரிப்பன் மாளிகையில் ஊடக கண்காணிப்பு மையம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு


ரிப்பன் மாளிகையில் ஊடக கண்காணிப்பு மையம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2019 3:45 AM IST (Updated: 22 March 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ரிப்பன் மாளிகையில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

சமூக ஊடகங்களில் வெளியாகும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்காணிக்க சென்னை ரிப்பன் மாளிகையில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.லலிதா, மக்கள் தொடர்பு அதிகாரி உமாபதி ஆகியோரும் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊடக கண்காணிப்பு குழுவால் அனுமதிக்கப்பட்ட விளம்பரங்களை மட்டும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அனுமதியின்றி வெளியிடப்படும் விளம்பரங்களை கண்காணிக்க இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேர்தல் தொடர்பான விவரங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு ‘1950’ என்ற எண்ணுடன் கூடிய அழைப்புமையம் செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தில் 48 பறக்கும் படை குழுக்கள், 48 நிலை கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்த சுவர் விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story