கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் வேட்புமனு தாக்கல்


கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 5:37 PM GMT)

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க.வை சேர்ந்த எல்.கே.சுதீஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளராக இருக்கிறார்.

இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் துருகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டார். குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன், அ.தி.மு.க. மாவட்ட மருத்துவர் அணி பொருளாளர் குமரேசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனுவாசன், தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் ஞானவேல், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காசாம்பு பூமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஊர்வலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்ததும் மதியம் 2.30 மணிக்கு சுதீஷ், தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயா தேவியிடம் தாக்கல் செய்தார். நிர்வாகிகள் கருணாகரன், நல்லதம்பி, கோவிந்தன் ஆகியோர் முன்மொழிந்தனர். அப்போது அவருடன் சேலம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் இளங்கோவன், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, பா.ம.க. மாநில துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

எல்.கே.சுதீசுக்கு மாற்றுவேட்பாளராக அவரது மனைவி பூர்ணாதேவி வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் நகர செயலாளர் பாபு மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

Next Story