வட, தென்இந்தியர்களின் வாக்குகளை கவர மண்ணின் மைந்தர் கொள்கையில் இருந்து பின்வாங்கும் சிவசேனா
ஒரு காலத்தில் மண்ணின் மைந்தர் கொள்கையில் மிகவும் தீவிரமாக இருந்த கட்சி சிவசேனா.
மண்ணின் மைந்தர் கொள்கை
மும்பையில் வாழும் பிற மாநில மக்களுக்கு எதிராக அக்கட்சி வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வரலாறுகளும் உண்டு. சமீபத்தில் வெளியான பால்தாக்கரே வாழ்க்கை வரலாறு படத்தில் கூட தென் இந்தியர்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் அந்த கட்சி பிற மாநிலத்தவர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்க தொடங்கி உள்ளது. சிவசேனா பிற மாநிலத்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை ஒழிக்கும் வகையில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று வடஇந்தியர்கள் மத்தியில் பேசியிருந்தார்.
எல்லோரும் எங்களுடையவர்கள்
இந்தநிலையில் மும்பை மிரா ரோட்டில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களை வடஇந்தியர், தென்இந்தியர் என பிரிக்க முடியாது. என்னை பொறுத்தவரை எல்லோரும் இந்தியர்கள். இங்கு (மராட்டியம்) உள்ள எல்லோரும் எங்களுடையவர்கள். எனவே தான் நான் இங்கு வந்துள்ளேன்.
உங்களில் பெரும்பாலானவர்கள் மராட்டியத்தில் நீண்ட காலமாக உள்ளீர்கள். என்னை விட நன்றாக மராத்தி பேசுகிறீர்கள். பிறகு எப்படி நமக்குள் வேறுபாடுகள் இருக்க முடியும். நாம் எல்லோரும் ஒன்றுதான்.
மொழி முக்கியமல்ல
என்னை கேட்டு இருந்தால் நான் இந்தியில் பேசியிருப்பேன். ஆங்கிலம், மராத்தி, இந்தி, பிரஞ்சு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுவேன். இங்கு மொழி முக்கியமில்லை. மனதில் இருந்து பேசுவதே முக்கியம். நாம் மராட்டியத்தில் இருக்கிறோம். எனவே மராத்தியில் பேசுகிறோம். அயோத்தியில் உத்தவ் தாக்கரே இந்தியில் பேசினார். இங்கு நான் அரசியல் பேச வரவில்லை.
காவி வண்ணம்(இந்துத்வா) நம்மை ஒன்று சேர்த்து உள்ளது. அது நம் ரத்தத்தில் ஊறி உள்ளது. அது சாயம் போக நாம் விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்வாங்க காரணம்
ஆதித்ய தாக்கரே பேசிய மிரா ரோட்டில் 68.96 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். 5.67 சதவீதம் ஜெயின் சமூகத்தினரும், அதிகளவில் வடஇந்தியர்களும் வசித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் மும்பையில் கணிசமாக உள்ள வடஇந்தியர்கள், தென்இந்தியர்கள் மற்றும் குஜராத்தியர்களின் வாக்குகளை பெற சிவசேனா தீவிர மண்ணின் மைந்தன் கொள்கையில் இருந்து பின்வாங்க தொடங்கி உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Related Tags :
Next Story