நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதல் பள்ளத்தில் விழுந்து கல்லூரி மாணவி பலி


நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதல் பள்ளத்தில் விழுந்து கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 24 March 2019 3:45 AM IST (Updated: 24 March 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால், அதில் சென்ற கல்லூரி மாணவி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

ஆவடி,

ஆவடி அடுத்த பட்டாபிராம், சார்லஸ் நகரை சேர்ந்தவர் ஹேரா (வயது 19). ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஹேராவும், சக மாணவரான பூந்தமல்லி அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ரகுவரன் (19) என்பவரும் நேற்று முன்தினம் மாலை ஆவடி அடுத்த வீராபுரத்தில் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சென்றனர்.

அங்கு நண்பரை சந்தித்து விட்டு, அங்கிருந்து ஹேராவை அவரது வீட்டில் விடுவதற்காக ரகுவரன் மோட்டார் சைக்கிளில், ஆவடி அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியது.

இதில் ஹேரா அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரகுவரன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story