கிருஷ்ணகிரி பழையபேட்டையில் சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி


கிருஷ்ணகிரி பழையபேட்டையில் சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 24 March 2019 10:00 PM GMT (Updated: 24 March 2019 5:06 PM GMT)

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் சாலையில் தேங்கி இருக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பழையபேட்டை 11-வது வார்டு செந்தில்முருகன் நகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். அப்போது அங்குள்ள கால்வாய்கள் அடைக்கப்பட்டதால், சாலையில் மூன்று இடங்களில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தெருக்களில் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப் பகுதி மக்கள் கூறியதாவது:-

இங்கு கடந்த 10 ஆண்டுகளாக சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இன்றி அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த தேர்தலின் போது, அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவதாக கூறினார்கள். ஆனால் கால்வாய் மட்டும் கட்டி தந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டி கால்வாயை அடைத்து விட்டனர். இதனால் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் தேங்கி உள்ளது. இதில் பெருகி உள்ள கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையும் உள்ளது. மேலும் ஏராளமான அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

Next Story