தக்கலை அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் 2 வாலிபர்கள் கைது


தக்கலை அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 March 2019 10:15 PM GMT (Updated: 25 March 2019 5:33 PM GMT)

தக்கலை அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சிறிதுநேரம் கழித்து பெற்றோர் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த மாணவி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்கமுடியவில்லை.

 பின்னர், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில், “தக்கலை கீழக்கல்குறிச்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான நிதின்(வயது 19) மற்றும் அவருடைய நண்பர் ஆகிய 2 பேரும் சேர்ந்து எனது மகளை கடத்திச் சென்று விட்டனர்” என கூறி இருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நிதினும், அவரது நண்பரான தக்கலை பனவிளை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சாலமனும்(19) சேர்ந்து மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாணவியையும, கடத்தி சென்ற 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் சாலமனின் உறவினர் வீட்டில் மாணவியை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு, அவரை கடத்திய நிதின், சாலமன் ஆகிய 2 பேரையும் பிடித்து குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், நிதின், சாலமன் ஆகிய 2 பேரும் மாணவியை கடத்தி சென்று, வல்லநாட்டில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் நிதின், சாலமன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும், மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story