தூத்துக்குடி தொகுதியில் “பொருளாதார-சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் கனிமொழி” பீட்டர் அல்போன்ஸ் பேட்டி


தூத்துக்குடி தொகுதியில் “பொருளாதார-சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் கனிமொழி” பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 6:37 PM GMT)

“தூத்துக்குடி தொகுதியில் பொருளாதார, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் கனிமொழி” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

தூத்துக்குடி, 

“தூத்துக்குடி தொகுதியில் பொருளாதார, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் கனிமொழி” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று மதியம் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

துறைமுகம்

தூத்துக்குடி தொகுதியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துறைமுகத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது. அந்த சதியின் ஒரு கட்டமாக இந்தியாவில் உள்ள பல துறைமுகங்கள், விமான நிலையங்களை மோடி அரசு அதானி, அம்பானி தொழில் குடும்பங்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அவர்களை உரிமையாளராக்கி விட்டது. இந்த தேர்தல் தூத்துக்குடி துறைமுகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும். தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றால் துறைமுகத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி அதன் உரிமையை பாதுகாப்பார்.

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை மத்திய அரசு சிதைத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் லாபகரமாக இயங்கி கொண்டு இருந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் தூத்துக்குடியின் முகவரியை மாற்றி அமைக்கும் திட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து, தி.மு.க அதில் இடம் பெறும்போது, சேது சமுத்திர திட்டம் விட்ட இடத்திலேயே மீண்டும் தொடங்கப்படும். ராகுல்காந்தி இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த குடும்பத்தினரை முதல்-அமைச்சர் சந்திக்கவில்லை. பிரதமர் அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார மாற்றம்

தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற இலக்கணத்துக்கு வடிவம் கொடுக்கும் வகையில் பல ஆளுமை உடையவர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும், என்ன தெரிந்து இருக்க வேண்டும், பொதுப்பணியில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்கு அவரை விட சிறந்த பெண்மணி தமிழகத்தில் இல்லை. கனிமொழிக்கு மிகப்பெரிய முகவரி இருக்கிறது. இது தூத்துக்குடி மக்களுக்கு பயன்பெற வேண்டும் என்றால் கனிமொழியை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்ய வேண்டும். அவர் தூத்துக்குடி முகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஈடுபாடும், ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளவர். மிகப்பெரிய பொருளாதார, சமூக மாற்றத்தை தூத்துக்குடி தொகுதியில் ஏற்படுத்தக்கூடியவர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வீ.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story