பாலம் அமைக்கும் பணி: ஆனைகுட்டத்தில் இருந்து விருதுநகருக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்
சிவகாசி அருகே நெடுஞ்சாலைதுறையினர் பாலம் அமைத்துவருவதால் ஆனைகுட்டத்தில் இருந்து விருதுநகர் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
திருத்தங்கல்,
குடிநீர் விருதுநகர் மற்றும் ரோசல்பட்டி பகுதியில் உள்ள 15–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருத்தங்கல் அருகே உள்ள ஆனைகுட்டம் நீர்த்தேக்க பகுதியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. உறை கிணறுகள் அமைத்து தினமும் 7 லட்சம் குடிநீர் எடுத்து குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் சிவகாசி அருகே மத்திய சேனை என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் கட்டி வருகின்றனர். குடிநீர் குழாய் கொண்டு செல்லப்படும் பகுதியில் பாலம் கட்டப்படுவதால் குழாயை அகற்றி விட்டனர். இந்த பணிக்காக 2 நாட்கள் மட்டும் குடிநீர் ஏற்ற வேண்டாம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. விரைந்து பணியை முடித்து மீண்டும்குழாய் பதிக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளனர்.ஆனால் திட்டமிட்டபடி பணி முடிவடையாமல் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சப்ளை நடைபெறவில்லை. இதனால் விருதுநகர் மற்றும் 15 கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிப்படைந்துள்ளது. கிராமங்களில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில் குடிநீர் வினியோகம் பாதிப்படைந்துள்ளது.
எனவே விரைவில் பணியை முடித்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story