நாமக்கல் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்


நாமக்கல் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-27T02:04:01+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

எலச்சிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காளிப்பட்டி அருகே வட்ட வழங்கல் அலுவலர் வேலு தலைமையிலான தேர்தல் சிறப்பு பறக்கும் படை எண்-1 குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் வந்த கருமத்தம்பட்டியில் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வரும் தீபாராம் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. விசாரணையில் அவர் அரூர், ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் பகுதிகளில் சப்ளை செய்த பொருட்களுக்கான தொகையை வசூல் செய்து எடுத்துச்சென்றதாக தெரிவித்தார். ஆனால் அந்த பணம் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல திருச்செங்கோடு - சேலம் சாலையில் பரமத்தி வேலூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் கதிர்வேல் தலைமையிலான தேர்தல் நிலைக்குழு 2-ஐ சேர்ந்தவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஆரோக்கியமேரி என்ற ஆசிரியை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில் அவர் சேலத்திற்கு நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா தளவாய்ப்பட்டி அருகே உள்ள மடத்துவலி சுப்பு தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் வினோத்குமார் (வயது 31). எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர் நேற்று மாலை ராசிபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வாழப்பாடி நோக்கிச் சென்றார். அப்போது ராசிபுரம் - ஆத்தூர் மெயின் ரோட்டில் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி கவுரிசங்கர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வினோத்குமார் சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அவரிடம் ரூ.72 ஆயிரத்து 700 வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அவர்கள் அந்த பணத்தை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஆசியா மரியத்திடம் ஒப்படைப்பதற்காக நாமக்கல்லுக்கு கொண்டு சென்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story