மராட்டியத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய வருகிறார்கள்


மராட்டியத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய வருகிறார்கள்
x
தினத்தந்தி 28 March 2019 5:00 AM IST (Updated: 28 March 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்பட பல தலைவர்கள் மராட்டியத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்கள்.

மும்பை,

ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்பட பல தலைவர்கள் மராட்டியத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்கள்.

நட்சத்திர தலைவர்கள்

மராட்டியத்தில் 4 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 11 மற்றும் 18-ந் தேதிகளில் மொத்தம் 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அங்கு அனல் பறக்கும் பிரசாரம் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மேற்கண்ட 2 கட்ட தேர்தலிலும் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்காக பிரசாரம் செய்ய இருக்கும் 40 நட்சத்திர தலைவர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளது.

ராகுல்காந்தி

அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மூத்த தலைவர்கள் சுஷில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த சுஜய் விகே பாட்டீலின் தந்தையும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் பெயரும் நட்சத்திர தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதால் மராட்டிய தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி உள்ளது.

Next Story