கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் வாகன சோதனை, என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை


கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் வாகன சோதனை, என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 March 2019 11:00 PM GMT (Updated: 27 March 2019 10:59 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேரிடம் ரூ.3¼ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெய்வேலி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை தாசில்தார் சிவா தலைமையிலான அதிகாரிகள் கடலூர் அருகே பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் காரில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நெய்வேலி இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையை சேர்ந்த காளிமுத்து என்பதும், என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பதும், மினிலாரி வாங்குவதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் தேர்தல் சிறப்பு தாசில்தார் மணிவண்ணன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலையில் நெய்வேலி மெயின்பஜார் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.83 ஆயிரத்து 360 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நெய்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பதும், கடையில் வசூலான பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், தலைமைக்காவலர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

சிறுபாக்கம் சோதனைச்சாவடி அருகே கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முகமது அசேன், சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.62 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அக்ரஹார தெருவை சேர்ந்த சுப்புராயன் மகன் திருவாசகம் என்பது தெரியவந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.62 ஆயிரத்து 500-யை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை திட்டக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் பானுகோபன், தாசில்தார் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர்.

Next Story