‘தி.மு.க. கூட்டணியால் கலப்பட பிரதமரைத்தான் தர முடியும்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘தி.மு.க. கூட்டணியால் கலப்பட பிரதமரைத்தான் தர முடியும்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியால் கலப்பட பிரதமரைத்தான் தர முடியும் என்று விழுப்புரம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு ஆதரவு திரட்டும் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

விழுப்புரம், 

அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி.

தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் எதை செய்வோமோ அதைத்தான் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். மத்தியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.வினர், தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள்? தமிழகம் என்ன வளர்ச்சி அடைந்தது, ஏதாவது சொல்ல முடியுமா? உங்களது குடும்பம்தான் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இன்றைக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அது பொய்யான அறிக்கை. வெற்று அறிக்கை.

அ.தி.மு.க., மதவாத கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். கடந்த 1999-ம் ஆண்டு கூட்டணி வைத்தபோது பா.ஜனதா, மதவாத கட்சியாக தெரியவில்லையா?. பச்சோந்தி எப்படி தனது நிறத்தை மாற்றிக்கொள்கிறதோ? அதுபோல் ஸ்டாலின் அவ்வப்போது தனது நிலைபாட்டையும், கொள்கையையும் மாற்றி வருகிறார்.

வைகோ தற்போது ஊழலை பற்றியெல்லாம் பேசுகிறார். அவர் ஒரு கட்சியை வைத்துக்கொண்டு வேறு கட்சி சின்னத்தில் நிற்கிறார். அவர் தனது கட்சியை வேறு கட்சிக்கு அடமானம் வைத்துவிட்டார். ம.தி.மு.க.வில் ம என்ற முதல் எழுத்தை தூக்கிவிட்டு தி.மு.க. என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு கொள்கையும், கோட்பாடும் கிடையாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ், தி.மு.க.வை பற்றி வாய்கிழிய பேசிய வைகோ, இன்று தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்.

அதுபோல் விடுதலை சிறுத்தைகளும் தங்கள் கட்சியை வேறு கட்சியிடம் அடமானம் வைத்துவிட்டனர். அதன் தலைவர் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இங்கு விழுப்புரத்தில் அவரது கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இது என்ன கலப்பட கட்சியா? இவர்கள் எல்லாம் கூட்டணி வைத்துக்கொண்டு கலப்பட பிரதமரைத்தான் தர முடியும்.

சென்னையில் நடந்த, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின்போது எங்களது கூட்டணி சார்பில் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அவரது கருத்தை அவரது கூட்டணி கட்சியினரே ஏற்கவில்லை.

அதேநேரம் மேற்கு வங்காளத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்போம் என்று கூறுகிறார். இவரை நம்பி காங்கிரஸ் இருக்கிறது. இவர்கள் நாட்டை ஆண்டால் நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?

திறமையான பிரதமர் நாட்டை ஆள வேண்டும். நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அப்போதுதான் நாடு பாதுகாப்பாக இருக்கும், நாடு வளம் பெறும். மத்தியில் நிலையான ஆட்சியை அவரால்தான் தர முடியும். ஸ்டாலின் போன்று நாம், மாநிலத்திற்கு மாநிலம் பிரதமரை மாற்றுவது கிடையாது. ஒரே பிரதமரான மோடியை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒருவரை பிரதமராக தேர்ந்து எடுக்க முடியவில்லை என்றால் இந்த நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். உங்களிடம் இந்த நாட்டை கொடுத்துவிட்டால் குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோன்ற கதையாகி விடும்.

தி.மு.க.வின் அராஜகம் எல்லை மீறி செல்கிறது. உங்கள் கட்சியினரால்தான் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை செய்பவருக்கு ஆதரவாக ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். இவர்கள் கையில் பொறுப்பு வந்தால் நாடு தாங்குமா? ஸ்டாலினுக்கு எப்போது பார்த்தாலும் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் என்ற எண்ணம்தான் இருக்கிறது. நாங்கள் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல. எங்களை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசி வரை எதிர்க்கட்சியாக இருப்பதே பெரிய விஷயம்தான்.

சட்டசபையில் ஜனநாயக படுகொலை செய்த கட்சி தி.மு.க., சபாநாயகரை கீழே தள்ளி அவரது புனிதமான இருக்கையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்து அராஜகம் செய்தனர். தி.மு.க. என்றாலே அராஜகம் பிடித்த கட்சி என்று மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி ஸ்டாலினுக்கு இல்லை.

சாதிக்பாஷா மர்ம சாவு வழக்கை நீர்த்து போக செய்துவிட்டனர். தற்போது சாதிக்பாஷாவின் மனைவி ரேணுகாபானு, தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசுக்கு மனு கொடுத்துள்ளதாக தகவல் வந்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் சட்டரீதியாக விசாரித்து, யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுபோல் அண்ணா நகர் ரமேஷ் மர்ம சாவு, காஞ்சீபுரம் பால்மலர் மர்ம மரணம் உள்ளிட்டவை தற்போது புகார்களாக அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு இந்த புகார்கள் குறித்து சட்டரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர தைப்பொங்கல் அன்று குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. அதை கொடுக்கக்கூடாது என்று ஸ்டாலின் வழக்கு போட்டார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது ஏழை குடும்பத்தை சேர்ந்த தொழிலாளிக்கு 2 ஆயிரம் ரூபாயை அ.தி.மு.க. அரசு வழங்கி வந்தது. அதை வழங்கக்கூடாது என்று தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர். அதற்குள் தேர்தல் வந்துவிட்டது.

தேர்தல் முடிந்தவுடன் ஏழை தொழிலாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயை அம்மா அரசு வழங்கும். ஏழைகளுக்கு வழங்குவதை நிறுத்த சொல்கிற ஒரே கட்சி இந்தியாவிலேயே தி.மு.க.தான். அவர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய, நாடு பாதுகாப்பாகவும், செழிப்பாகவும், வளமுடனும் இருக்க உறுதியான, திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story