நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் 37 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் நாமக்கல்லில் டி.டி.வி. தினகரன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் 37 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் நாமக்கல்லில் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 10:00 PM GMT (Updated: 31 March 2019 7:25 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் 37 இடங்களில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள் என நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.பி.சாமிநாதனை ஆதரித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்த வேனில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் வர இருக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய, மாநில ஆட்சியாளர்களை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

எப்படியும் 18 தொகுதியில் 8 இடங்களில் வெற்றிபெற வில்லை என்றால் தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும். யார் வந்தாலும் காப்பாற்ற முடியாது. எனவே ஏதாவது 10 தொகுதிகளில் பணம் கொடுத்து விட்டு தேர்தலை நிறுத்த பார்ப்பார்கள். ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். இவர்கள் 18 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது. ஆட்சி தானாக முடிவுக்கு வர போகிறது.

கல்லா பெட்டிகளை ஒழிக்க பரிசு பெட்டி சின்னத்தை கோர்ட்டு நமக்கு கொடுத்து இருக்கிறது. குமாரபாளையத்தில் மிராசுதாரர் ஒருவர், நமது நிர்வாகிகளை மிரட்டுவதாக கேள்விபட்டேன். ஆனால் மக்களை மிரட்ட முடியாது. தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய அரசுடன் கூட்டணி வைத்து உள்ளனர். இந்த கூட்டணி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் கூட்டணி. ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.

நான் பிரசாரத்தை தொடங்கும் முன்பு ஜெயலலிதாவின் நினைவிடம் போய் அஞ்சலி செலுத்தி வந்தேன். இவர்கள் யாரும் அங்கு போகவில்லை. அவரது ஆன்மா ஏற்று கொள்ளாது என்பது இவர்களுக்கு தெரியும்.

எங்களிடம் ஒன்றுக்கும் ஆகாத 36 சின்னங்களை கொடுத்தனர். அதில் தெரியாமல் பரிசு பெட்டியை வைத்து விட்டனர். நான் அதை தேர்வு செய்து விட்டேன். தற்போது உலகம் முமுவதும் அது சேர்ந்து விட்டது. எதிர்பார்ப்பு இருப்பதால் தான் எங்கள் சின்னம் மக்களிடம் சேர்ந்து உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர்கள் நிச்சயம் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள். அ.ம.மு.க. வேட்பாளர்கள் பிரதமரை தேர்வு செய்வார்கள். தினசரி டீசல் விலை நிர்ணயம் செய்வதால் லாரி தொழில் நலிவடைந்து விட்டது. எங்களது தேர்தல் அறிக்கை விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் உள்ளது. மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அவை தலைவர் அன்பழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார், அமைப்பு செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணாசிலை அருகிலும், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலும் திறந்த வேனில் நின்றபடி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

Next Story