இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்


இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 31 March 2019 10:30 PM GMT (Updated: 31 March 2019 7:33 PM GMT)

இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேலும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24-ந்தேதி பங்குனி திருவிழா காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பால்குடம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

இதையடுத்து முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையாக வாசனை திரவியங்களால் அபிஷேகமும், பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு அலங் காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

மணமேல்குடி நல்லூர் கிராமத்தில் சாம்பசிவமூர்த்தி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து காப்புக்கட்டிய நாளிலிருந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில், சாம்பவ சிவமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. 10-வது நாள் காவடி எடுப்பு திருவிழா நாளன்று சுற்று வட்டார கிராமமக்கள் விரதம் இருந்து மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவிலிருந்து காவடி, பால்குடம், பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நல்லூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story