போலீசில் சிக்க வைத்த டி-ஷர்ட், கொலையாளி சிக்கியது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்


போலீசில் சிக்க வைத்த டி-ஷர்ட், கொலையாளி சிக்கியது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 1 April 2019 5:00 AM IST (Updated: 1 April 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளி சிக்கியது எப்படி? என்பது பற்றி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை,

கோவை அருகே 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாலை அங்குள்ள கடைக்கு வெற்றிலை வாங்க சென்றாள். பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் 25-ந் தேதி அந்த பகுதி முழுவதும் சிறுமியை போலீசாரும், பொதுமக்களும் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

ஆனால் போலீசாரும், பொதுமக்களும் தேடிய அதே இடத்திலேயே மறுநாள் அந்த சிறுமியின் உடல் கிடந்துள்ளது. எனவே சிறுமியை அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தான் யாரோ கொலை செய்து அங்குள்ள வீட்டில் வைத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. எனவே சிறுமி காணாமல் போன நேரத்தில் அந்த தெருவில் யார்-யார்? வீட்டில் இருந்தார்கள்? யார்-யார் வெளியே சென்றிருந்தார்கள் என்று போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். இதில் அதே தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார்(வயது 34) என்பவர் வீட்டில் இருந்தது தெரியவந்தது.

மேலும் சந்தோஷ்குமார் அந்த சிறுமியிடம் பேசியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏற்கனவே பார்த்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று அவர் சிறுமியை அழைத்ததையோ, பேசியதையோ யாரும் பார்க்கவில்லை. இதனால் அவர் இதை செய்திருக்க மாட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் சந்தோஷ்குமார் வீட்டில் நடந்தது.

அதாவது சிறுமி காணாமல் போன 25-ந் தேதியன்று இரவு 9 மணியளவில் சந்தோஷ்குமாரின் பாட்டி இறந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் இறந்து விட்டதால் அந்த வீட்டுக்கு உறவினர்கள் பலர் வந்து சென்றனர். துக்கம் விசாரிக்க வந்தவர்கள் வீட்டின் உள்ளேயும் சென்றுள்ளனர். அப்போது அங்கு சிறுமியின் உடல் இருந்ததாக யாரும் புகார் கூறவில்லை.

எனவே சிறுமி காணாமல் போன நேரத்தில் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார் என்பதை தவிர அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்ய முடியாததால் சந்தோஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட வில்லை. பாட்டி இறந்ததால் அந்த வீட்டில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதியதால் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சந்தோஷ்குமார் வர வில்லை.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் போலீசாருக்கு இருந்த ஒரே துருப்பு சீட்டு சிறுமியின் உடலை சுற்றி இருந்த டி-ஷர்ட் தான். அது யாருடையது என்றும் அதை அணிந்திருந்ததை யாராவது பார்த்தார்களா? என்றும் போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். ஆனால் அந்த டி-ஷர்ட் அணிந்தவரை யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பின்னர் அந்த சிறுமி காணாமல் போன நேரத்தில் அந்த தெருவில் வீட்டில் இருந்த சந்தோஷ்குமார் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சந்தோஷ்குமார் தவிர மற்றவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது. எனவே சந்தோஷ்குமாரிடம் போலீசார் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதையும், சிறுமியின் உடலில் சுற்றியிருந்த டி-ஷர்ட் அவருடையது தான் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். அந்த டி-ஷர்ட்டை அவர் சில நாட்களுக்கு முன்பு கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வாங்கி உள்ளார். அது சிறியதாக இருந்ததால் அதை அவர் அணியவில்லை. அதனால் தான் அந்த டி-ஷர்ட்டை அவர் அணிந்ததை யாரும் பார்க்கவில்லை.

மேலும் பாட்டி இறந்த போது வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு தெரியாமல் சிறுமியின் உடலை சந்தோஷ்குமார் யார் கண்களிலும் படாமல் வீசியதாலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழவில்லை. ஆனால் சிறுமி காணாமல் போன நேரம், அவர் வீட்டில் இருந்த நேரம், மனைவியை விட்டு அவர் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வரும் சூழல், சிறுமியிடம் அவர் ஏற்கனவே பேசியதை சிலர் பார்த்த விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் அவரை குறி வைத்து மடக்கி பிடித்து கைது செய்ததாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story