100 நாள் வேலை திட்டத்திற்கு கையெழுத்து போட்டு அரசியல் கட்சி பிரசாரத்திற்கு செல்பவர்களுக்கு பணிஆணை ரத்து கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை


100 நாள் வேலை திட்டத்திற்கு கையெழுத்து போட்டு அரசியல் கட்சி பிரசாரத்திற்கு செல்பவர்களுக்கு பணிஆணை ரத்து கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 April 2019 10:15 PM GMT (Updated: 1 April 2019 5:50 PM GMT)

100 நாள் வேலை திட்டத்திற்கு கையெழுத்து போட்டு விட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு பணி ஆணை ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான டாக்டர் எஸ்.பிரபாகர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 18-ந் தேதி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கும், ஓசூர் சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பொது பார்வையாளர்களாக 2 பேரையும், செலவின பார்வையாளராக 2 பேரையும், காவல் துறை பார்வையாளராக ஒருவரையும் என மொத்தம் 5 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 1,850 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

கூடுதலாக 5 வாக்குச்சாவடிகள் அமைக்க கருத்துருக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் 1,850 வாக்குச்சாவடிகளே போதுமானது என்று தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 9,884 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் என 18 ஆயிரத்து 274 அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செலவு கணக்கு, தேர்தல் விதிமீறல் உள்ளிட்டவை கண்காணிக்க 57 தேர்தல் செலவின பார்வையாளர்கள், 17 பறக்கும் படை அலுவலர்கள், 8 வீடியோ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 2 ஆயிரத்து 605 வாக்குப்பதிவு எந்திரங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் வி.வி.பி.டி. எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மென்பொருள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உயிர் இழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் அரசு பணியாளர் ஒருவர் தவறாக அரசியல் பிரசாரம் மேற்கொண்டதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 72 ஆயிரத்து 614-ம், 7 லட்சத்து 53 ஆயிரத்து 498 பெண் வாக்காளர்களும், 236 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 26 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் நாள் அன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கும் பழுது ஏற்பட்டால் ஓட்டுப்பதிவில் தாமதம் ஏற்படாமல் இருப்பதற்காக கூடுதலாக 15 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக 21 புகார்கள் வந்துள்ளன. அதில் 19 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட 49 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. ரூ.23 லட்சம் தொகை கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 284 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வீடியோ மூலமும் அந்த வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிக்கப்பட உள்ளன.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 5 புகார்கள் வந்துள்ளன. அதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பணிக்கு வருவதாக கையெழுத்து போட்டு விட்டு, அரசியல் கட்சியினரின் பிரசாரத்திற்கு செல்வதாக புகார் வந்தது. அவ்வாறு கையெழுத்து போட்டு விட்டு பிரசாரத்திற்கு செல்பவர்களுக்கு பணி ஆணையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் சரியான வேலை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் 7 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தேர்தலுக்கு முன்பு தொடங்கி உள்ளது. இருப்பினும் தேர்தல் முடியும் வரையில் இணைப்புகள் வழங்க கூடாது என்று ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், தேர்தல் செலவின பார்வையாளர்கள் அனிஷ் பி.ராஜன், மாதுரி பெருமலா, பொது பார்வையாளர்கள் ராம்ராவ் போன்ஸ்லே, கல்யாண் சந்த் ஷமன், காவல் துறை பொது பார்வையாளர் யுரேந்தர் சிங், மாவட்ட வருவாய் அலவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தனி தாசில்தார் (தேர்தல்) ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story