தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதா? என கண்டறிய வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதா? என கண்டறிய வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 April 2019 10:15 PM GMT (Updated: 1 April 2019 7:28 PM GMT)

வாக்குச்சாவடி மையங்கள் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளனவா? என்று கண்டறிய வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் ஆய்வு செய்தார்.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்குப்பதிவுக்கு வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். முதற்கட்டமாக அவர், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி, அல்லிநகரம், வடபுதுப்பட்டி, அன்னஞ்சி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வருவதற்கு சாய்தள வசதிகள், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தார்.

ஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,220 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றார். ஆய்வின்போது, பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story