அரசு பள்ளிகளுக்கு ரூ.1.40 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்


அரசு பள்ளிகளுக்கு ரூ.1.40 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 7:33 PM GMT)

கீழ்வேளூர்,விழுந்தமாவடி அரசு பள்ளிகளுக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் கல்வி சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜென்னி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாகுல் ஹமீது, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினரும், முன்னாள் ஆசிரியருமான காத்தமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கீழ்வேளூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயந்தி, ரவி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளிக்கு தேவையான ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆசிரியர்களிடம் அளித்தனர்.

தொடர்ந்து பள்ளியில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையாளர் கவிதா, முன்னாள் தலைமையாசிரியர் (ஓய்வு) ஜெயக்குமார், அனைத்து ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேதாண்யத்தை அடுத்த விழுந்தமாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா மற்றும் கல்விசீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அன்புசெழியன் வரவேற்றார். விழாவில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மேஜை, நாற்காலி, எழுது பொருட்கள், கடிகாரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கிராமமக்கள் பள்ளிக்கு வழங்கினர்.

இதில் பெற்றோர் ஆசிரியர் கழக கல்வி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் பள்ளிஆசிரியர் செந்தில்வேல் நன்றி கூறினார். 

Next Story