குடும்பத்தகராறில் விபரீதம் கத்தியால் குத்தி காதல் மனைவி கொலை ஜோதிடருக்கு வலைவீச்சு


குடும்பத்தகராறில் விபரீதம் கத்தியால் குத்தி காதல் மனைவி கொலை ஜோதிடருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோதிடரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

படப்பை,

சென்னை செங்குன்றம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 25). கிளிஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியலட்சுமி என்ற கருத்தம்மா (23). சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கார்த்திக் (4) என்ற மகன் உள்ளான்.

திருமணமான நாள் முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. செங்குன்றம் பகுதியில் வசித்து வந்த இருவரும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் உள்ள அண்ணா நகர் இரண்டாவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கணவரை பிரிந்து கருத்தம்மா தனது மகனுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் கணவர் மீது சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்து ஒன்றாக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கருத்தம்மா சேலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று தங்கினார். மனைவியை பிரிந்து தனிமையில் இருந்த மகாராஜன், சேலம் சென்று மனைவி கருத்தம்மாவை சந்தித்தார்.

பின்னர், இருவரும் இனிமேல் நல்ல முறையில் சேர்ந்து வாழலாம் என்று கூறி அழைத்து வந்தார். அவரது பேச்சை நம்பி கருத்தம்மா கணவருடன் சில தினங்களுக்கு முன்பு செரப்பனஞ்சேரியில் உள்ள வீட்டிற்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜன் மனைவி கருத்தம்மாவை கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.

உடனே மகாராஜன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய மகாராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story