நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்கள் ஓட்டுப்போட மின்னணு வாக்குச்சீட்டு முறை அறிமுகம் ஈரோடு தொகுதியில் 171 பேர் வாக்களிக்க உள்ளனர்


நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்கள் ஓட்டுப்போட மின்னணு வாக்குச்சீட்டு முறை அறிமுகம் ஈரோடு தொகுதியில் 171 பேர் வாக்களிக்க உள்ளனர்
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 5:11 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்கள் ஓட்டுப்போட மின்னணு வாக்குச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு தொகுதியில் 171 ராணுவ வீரர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஈரோடு, 

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தபால் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்படும். அதேபோல் ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கும் தேர்தலில் ஓட்டுப்போட தபால் ஓட்டு முறை அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் முதல் முறையாக ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டு முறையில் தபால் ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி அந்தந்த தொகுதிகளில் உள்ள மின்னணு வாக்குச்சீட்டு ராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டை பெற்று ஓட்டளித்த பிறகு தபால் மூலமாக வாக்குச்சீட்டை அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 171 ராணுவ வீரர்களுக்கு மின்னணு வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த முறை கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை பின்பற்றப்பட்டது. வழக்கமாக வாக்குச்சீட்டும் தபால் மூலமாக ராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் ஆன்லைன் மூலமாக மின்னணு வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட 171 ராணுவ வீரர்கள் தங்கியுள்ள ராணுவ முகாம் அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அங்கு ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டை பெற்று, அதில் அவர்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடலாம். இதற்காக ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கும் தனித்தனி ‘ஒரு நேர பாஸ்வேர்டு’ (ஓ.டி.பி.) அளிக்கப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய முடியும். மேலும், ஓட்டுப்போட்ட பிறகு வழக்கமான முறையில் அந்த வாக்குச்சீட்டை பிரதி எடுத்து தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். அதில் முறைகேடு ஏற்படாமல் இருக்க ‘கியு-ஆர் கோடு’ ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும்போது அந்த கியு-ஆர் கோட்டை ஸ்கேன் செய்த பிறகு மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். எனவே ராணுவ வீரர்கள் அளிக்கும் ஓட்டுச்சீட்டு மட்டும் வாக்கு எண்ணிக்கையின்போது கியு-ஆர் கோடு ஸ்கேன் செய்யப்படும்.

ராணுவ வீரர் மற்றும் அவருடைய மனைவி தபால் ஓட்டுப்போட அனுமதிக்கப்படும். ஆனால் பெண் ராணுவ வீரராக இருந்தால், அவருடைய கணவர் வாக்களிக்க தபால் ஓட்டு முறை அனுமதிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story