கிள்ளை அருகே, பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு


கிள்ளை அருகே, பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 11:29 PM GMT)

கிள்ளை அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

பரங்கிப்பேட்டை,

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன், தொழிலாளி. இவரது மகன் கீர்த்திவாசன் (வயது 6). இவன் கிள்ளையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு சென்ற கீர்த்திவாசன், சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், உடனே இதுபற்றி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், அறிவழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்ட அறிவழகன் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தார். பின்னர் கீர்த்திவாசனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கீர்த்திவாசன் பரிதாபமாக இறந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து, கீர்த்திவாசன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிவழகன் கிள்ளை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்திவாசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story