மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜனதாவின் நோக்கம், காங்கிரஸ், தி.மு.க. பெண்களுக்கு எதிரான கட்சிகள் - கோவை தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு
மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜனதாவின் நோக்கம் என்றும், காங்கிரஸ், தி.மு.க.பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்றும் கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் அங்கிருந்து கோவை கொடிசியா மைதானத்துக்கு குண்டு துளைக்காத கார் மூலம் சென்றார். பின்னர் அவர் அங்கு கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர்கள் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), தியாகராஜன் (நீலகிரி), எம்.எஸ்.எம்.ஆனந்தன் (திருப்பூர்), கொங்கு மணிமாறன் (ஈரோடு) ஆகியோரை ஆதரித்து பேசினார். தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா என்று தமிழில் பேசி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் சகோதர-சகோதரிகளே, அத்தனை பேருக்கும் உங்கள் காவல்காரனின் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று இந்த கோவை நகரில் அதுவும் கல்வி, தொழில் வளம் மிகுந்த இந்த நகரத்தில் உங்களிடத்தில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம் தனித்துவம் வாய்ந்தது. தமிழ் தொன்மையான மொழி. அது உலகளவில் மதிப்பை பெற்றது. தமிழர் பண்பாடு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. ஒரு சில நாட்களில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்கள் நம்மை வழி நடத்தும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது. இந்த தேர்தல் 21-ம் நூற்றாண்டில் இந்த நாடு எவ்வாறு விளங்க போகிறது என்பதை வழிகாட்டும் தேர்தலாக இருக்க போகிறது. இந்த தேர்தலானது 2 கூட்டணி கட்சிகளுக்கும் இடையேயான போட்டி தேர்தலாக இருக்க போகிறது. மக்களுக்காக பாடுபடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு பக்கம். மக்களுக்கு எதிராக இருக்கும் காங்கிரஸ்-தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம்.
தேசிய ஜனநாயக அரசு நிலையான ஆட்சி செய்ய விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் நிலையற்ற அரசை அமைத்து அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற துடித்துக்கொண்டு இருக்கிறது. நாம் மக்களுக்காக சேவை செய்ய ஆட்சிக்கு வர விரும்புகிறோம். எதிர்க்கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்ற இப்போதே சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டு காலத்தில் நமது ஆட்சியில், ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற மந்திரத்தை உள்ளடக்கி ஆட்சி செய்து இருக்கிறோம். நமது அத்தனை வளர்ச்சி திட்டங்களும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் நிம்மதியை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதுகாப்பு தேவையோ அதில் நாம் உறுதியாகவும், நிலைப்பாடாகவும் இருக்கிறோம். நமது முக்கிய கடமையாக பாதுகாப்பு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பாதுகாப்பான இந்த நாட்டை உருவாக்க முக்கிய பங்காக தமிழகம் இருக்க போகிறது. பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்கள் அமைக்கும் தொழிற்சாலை தமிழகத்திலும் அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா சுயசார்பு பெற்ற தன்மையாக மாறிவிடும். இது தமிழகத்தில் அதிக முதலீட்டை கொண்டு வரும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கிறது. எதிரிகள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. பாதுகாப்புத்துறை மீது பல்வேறு காலக்கட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்கும்போது எதுவும் செய்யாமல் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்தபோதும், பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தியபோதும் காங்கிரஸ் பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கையே கையாண்டது.
இந்த கோவை நகரில் 1998-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பை நாம் மறக்க முடியாது. இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ், இந்த மாநிலத்தில் ஆட்சி செய்த தி.மு.க. அப்போது எப்படி மோசமாக செயல்பட்டதே காரணம் என்பது நமக்கு நன்றாக தெரியும். இன்று இருக்கும் இந்தியா பழைய இந்தியா அல்ல. புதிய இந்தியா. மாறுபட்ட இந்தியா. தீவிரவாதிகள் நம் மீது தாக்குதல் கொடுக்க நினைத்தால் அவர்களுக்கு அசலும், வட்டியுமாக திரும்ப தக்க பதிலடி கொடுப்போம்.
எனக்கு எதிர்க்கட்சிகளை பற்றி நினைக்கும்போது ஒரு விஷயம் புரியாமல் உள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற துல்லிய ராணுவ தாக்குதல் என்று ஒன்று நடந்ததா? என்று கேட்கிறார்கள். பயங்கரவாதிகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டதா? என்றும் கேட்கிறார்கள். எனக்கு அந்த விஷயம் புரியவில்லை. இதுபோன்ற எண்ணங்கள் நமது நாட்டை காப்பாற்றாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மோடி ஏன் தேசியம் பற்றி பேசுகிறார் என்று இப்போது எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. நான் கேட்கிறேன், தேசியத்தை பற்றி பேசுவது பெரிய குற்றமா?
எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். தேசியம் மூலம் தான் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 50 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதார திட்டத்தை கொடுக்க முடிந்தது. தேசியம் மூலம் நாட்டில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் கொடுக்க முடிந்தது. பிரதம மந்திரி யோஜனா திட்டத்தில் 42 கோடி மக்களுக்கு நம்மால் ஓய்வூதியத்தை கொடுக்க முடிந்தது. இந்த தேசியம் தான் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டு காலத்தில் 1½ கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 25 லட்சம் வீடுகள் தான் கட்டிக் கொடுக்கப்பட்டது. நாங்கள் தேசியவாதிகளாக இருந்தோம். தேசியவாதிகளாக இருந்து கொண்டு இருக்கிறோம். தேசியவாதிகளாகதான் இருப்போம் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை நான் பார்த்தேன். இந்தியர்களுக்கு எதிரான சக்திகளுக்கு அதில் தேவையான அம்சங்கள் உள்ளன. பயங்கரவாதிகளுக்கு அது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து உள்ளது. ஜாமீன் வாங்குவதற்கு தான் நாங்கள் ஆட்சிக்கு வருகிறோம் என்றும், ஜெயிலில் இருப்பது எல்லாம் கணக்கு இல்லை என்றும் கூறுகிறார்கள். இந்த மாநிலத்தை சேர்ந்த மறு வாக்கு எண்ணிக்கை மந்திரி தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார். அதனால் எனக்கு அந்த அறிக்கை மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல அவருக்கு தேவை எல்லாம் எப்படி ஜாமீன் பெற வேண்டும். எப்படியாவது வெளியே இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். ஒன்றை மட்டும் நாம் மறக்கக்கூடாது. அவரின் தலைவர் கூட வரிஏய்ப்பு குற்றத்துக்காக இப்போது கூட ஜாமீனில் தான் இருக்கிறார்கள்.
இந்தியாவில் நடுத்தர குடும்பங்கள் தான் நாட்டின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்தபோது நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் வளர்ச்ச்சி பெற பல திட்டங்களை நிறைவேற்றினோம். ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் நடுத்தர குடும்பங்களை நசுக்குவது தான் அவர்களின் பணியாக இருக்கிறது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் நடுத்தர குடும்பத்தின் நலன் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் மீண்டும் மக்கள் மீது அதிக வரிகளை விதிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதை நான் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அந்த கட்சியை வழிநடத்துபவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுயநலம் மிக்கவர்கள் என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக வரியை ஏற்றுவோம் என்றும் காங்கிரஸ் கூறி உள்ளது. காங்கிரசுக்கு நடுத்தர குடும்பங்களை வஞ்சிப்பது என்பது புதிது அல்ல. நடுத்தர குடும்பங்களை பற்றி மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி மோசமான வார்த்தையை கூறி உள்ளார். விலைவாசி உயர்வை குறித்து நடுத்தர குடும்பங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி எப்போதுமே நடுத்தர குடும்பங்களுக்கு சேவை செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. விலைவாசியையும் கட்டுக்குள் வைத்து இருந்தோம். முத்ரா வங்கி மூலமாகவும், ஸ்டார்ட்டர் அப் இந்தியா திட்டம் மூலமாகவும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவி செய்து இருக்கிறோம். சிறு, குறு தொழில்களுக்கு நீங்கள் ஒரு கோடி வரை கடன் வாங்க வேண்டும் என்று சொன்னால், 59 நிமிடங்களில் கடன் பெற முடியும். இது இங்கிருந்து சென்னைக்கு செல்வதை விட மிகக்குறைவான நேரம் ஆகும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் யாருக்குகெல்லாம் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருக்கிறதோ அவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவித்திருந்தோம். நான் உங்களுக்கு மற்றொரு உறுதி அளிக்கிறேன். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், நடுத்தர குடும்பத்தினரின் அறிவு, திறன் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன். அதை அரசியலுக்காகவோ, வாக்கு வங்கி அரசியலுக்காகவோ ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
கேரளா இங்கிருந்து வெகு தூரத்தில் இல்லை. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சேர்ந்து கொண்டு கேரள மாநில பாரம்பரியத்தையும். கலாசாரத்தையும் சீரழிக்கிறார்கள். அவர்கள் 2 பேரும் ஒருங்கிணைந்து சபரிமலை அய்யப்பன் புனிதத்தை கெடுப்பதுடன், ஓட்டு அரசியலுக்காக அனைத்து தவறுகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். கோவை மண்ணில் நான் நின்று பேசுகிறேன். இந்த கம்யூனிஸ்டு கட்சிகள் என்ன செய்தாலும் உங்களால் எவ்வித நம்பிக்கையையும் அளிக்க முடியாது. மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரட்டைவேடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜனதா கட்சி, கேரள மக்களின் பாரம்பரியத்தை, புனிதத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி அளிக்கிறேன்.
உங்களுக்கு ஒரு உறுதியை கொடுக்கிறேன். பா.ஜனதா கட்சி சிறு குறுந்தொழில்களை கைவிடாது. என்ன தேவைகள் இருக்கிறதோ அதை கண்டிப்பாக நிறைவேற்றும். உங்களின் ஆலோசனை பேரில்தான் ஜி.எஸ்.டி. வரியை 3 முறை மாற்றி அமைத்து எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு உள்ள ஜவுளி நிறுவனங்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு, உங்களுக்கு ஆதரவாக நிற்போம். ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை நிச்சயமாக சரி செய்ய, முழு முயற்சி செய்ய உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன். அதுமட்டுமல்ல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியானது நெசவாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உதவி செய்து உள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளோம். அதில் 66 சதவீதம் தமிழகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசு பெண்களுக்காக பாடுபடும் அரசாக, அவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளது. 7 கோடி பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு கொடுத்து உள்ளோம். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில்கூட அதிகமாக பெண்கள் பெயரில் இருக்கும் வீட்டிற்குதான் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதுபோன்று கடந்த ஆட்சியின்போது கருவுற்ற தாய்மார்களுக்கு 12 வாரங்கள் விடுமுறை என்று இருந்ததை நாங்கள் 24 வாரங்களாக அதிகரித்து உள்ளோம். காங்கிரஸ்-தி.மு.க. பெண்களுக்கு எதிராக உள்ள கட்சிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர் பெண்கள் குறித்து மிகவும் மோசமான, கேவலமான வார்த்தைகளை பேசி உள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தி.மு.க. மோசமான கட்சி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் தலைவர்கள் ஜெயலலிதாவை எவ்வளவு தரக்குறைவாக பேசினார்கள் என்பதை நம்மால் மறந்துவிட முடியாது.
தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது ஜெயலலிதாவை மிகவும் மோசமாக பேசி வருகிறார்கள். இதுபோன்ற கட்சிகள் தமிழகத்தில் உள்ள பெண்களை காப்பாற்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?. தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் ஆலோசனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்த திட்டங்களை நாம் தீவிரமாக நிறைவேற்றி வருகிறோம். அதற்காக தனியாக அமைச்சகம் அமைக்கப்பட்டு, தண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளோம். நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் குறிப்பிட்டு உள்ளோம்.
ஆறுகளை சுத்தப்படுத்துவது, இணைப்பது, புதிய உக்திகளை கையாண்டு அதன் மூலம் நீர்ப்பாசன முறையை ஏற்படுத்துவது, கடல் நீரை குடிநீராக மாற்றுவது, மழைநீரை சேமிப்பது குறித்தும் கூறி உள்ளோம். அதுமட்டுமல்ல மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்றும் நாம் ஏற்கனவே உறுதி அளித்து உள்ளோம்.
இந்த தேர்தலானது மிகவும் வித்தியாசமான தேர்தல் ஆகும். இளைய நண்பர்கள், இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள். ஜனநாயக தேர்தலில் பங்கேற்க போகிறார்கள். தமிழகத்தில் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் வருகிற 18-ந் தேதி வாக்களிக்க உள்ளனர். அவர்களை வருக வருக என்று வாக்களிக்க வரவேற்கிறேன். நீங்கள் உங்கள் முதல் வாக்குகளை நல்ல காரியத்துக்காக பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு செய்தியை இந்த நாட்டுக்கு சொல்ல வேண்டும். நீங்கள் நிச்சயமாக இந்த நாட்டை பிரித்தாளும், குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளிக்கக்கூடாது என்று உறுதி கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வந்துவிட்டது. இதற்கு முன்பு, இதுபோல நடக்க முடியாத விஷயங்கள் சாத்தியமாகி வருகிறது என்பது அவர்களுக்கு புரியும்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் காவலாளிதான். அவர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், தவறாக ஆட்சி செய்பவர்களுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் காவல்காரர்களாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே நீங்கள் வரும் 18-ந் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாம் அத்தனை பேரும் ஒருங்கிணந்து வரும் நாட்களில் வலிமையான நாட்டை உருவாக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் நாளை நமதே, 40-ம் நமதே என்று தமிழில் பேசி தனது பேச்சை முடித்தார்.
பிரதமர் நரேந்திரமோடியின் ஆங்கில பேச்சை பா.ஜனதாவை சேர்ந்த நரேந்திரன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்தார்.
பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story