வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2019 10:45 PM GMT (Updated: 11 April 2019 8:42 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. அதை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி(மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை(தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இந்த 6 தொகுதிகளிலும் 1,660 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3,993 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,034 கட்டுப்பாட்டு எந்திரங்களும், வாக்காளர் வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரம்(வி.வி.பேட்) ஆகியன பயன்படுத்தப்படுகிறது.

எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படுகிறது என்பது தொடர்பாக ஏற்கனவே கணினி முறையில் குலுக்கல் நடைபெற்றது. அதன்படி அந்தந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உண்டான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் முன்பு அதில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். அதன்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

இந்த பணியானது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு தாசில்தார் அலுவலகத்திலும், திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு கண்டோன்மெண்ட் தாசில்தார் அலுவலகத்திலும், திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு பாலக்கரையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திலும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்திலும், கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்திலும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெற்றது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர், சின்னம், புகைப்படம் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன் படுத்தப்படுகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் இடத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் அமைந்துள்ளது. 2-வதாக காங்கிரஸ் வேட்பாளரின் பெயர், புகைப்படம், சின்னம் அமைந்துள்ளது. 9-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னமும், 2-வது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் இடத்தில், அதாவது வரிசைப்படி 17-வது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னமும் இடம் பெற்றுள்ளது. 25-வது இடத்தில் ‘நோட்டா’ இடம் பெற்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணியினை மாவட்ட கலெக்டரும் திருச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story