அரூர் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்


அரூர் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்
x
தினத்தந்தி 12 April 2019 11:30 PM GMT (Updated: 12 April 2019 7:47 PM GMT)

அரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமாருக்கு ஆதரவு திரட்டினார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.சம்பத்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் நட்சத்திர பேச்சாளர்களும் ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள். இதேபோல் வேட்பாளர் பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் ஆகியோருக்கு ஆதரவாக தமிழக முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் வாகன பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணியில் உள்ள அரசுகள் இருந்தால்தான் அந்தந்த மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை பெற முடியும். அந்த வகையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். அரூர் தொகுதியில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று பேசினார்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தே.மு.தி.க. மாவட்டசெயலாளர் தம்பி ஜெய்சங்கர், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ், மாவட்ட வக்கீல் அணி துணைத்தலைவர் ஆர்.ஆர்.பசுபதி, நகர பொறுப்பாளர் வேலு, முன்னாள் நகர செயலாளர் ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பழனி முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் காவேரி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story