புதுவை மாநிலம் வளர்ச்சியடைய 2 சாமிகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேச்சு


புதுவை மாநிலம் வளர்ச்சியடைய 2 சாமிகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 13 April 2019 12:13 AM GMT (Updated: 13 April 2019 12:13 AM GMT)

புதுவை மாநிலம் வளர்ச்சியடைய 2 சாமிகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மாறன், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முருகசாமி ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மாலை புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாக்குமுடையான்பட்டு, அரியாங்குப்பத்தில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர் பேசியதாவது:-

தமிழகம், புதுவை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் போன்று திகழ்ந்து வருகிறது. தமிழகம் மாநிலமாகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. இங்கே தேசிய கட்சிகள் மேல் உள்ள பற்றினால் புதுச்சேரி மாநிலம் கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் சீரழிந்து வருகிறது என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சாமிகளை கும்பிட்டு பலன்பெறுவது தான் வழக்கம். ஆனால் புதுவையில் 2 சாமிகள் இருந்து கொண்டு போடுகின்ற சண்டையால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் நாராயணசாமி, மன்மோகன்சிங் அரசில் மத்திய மந்திரியாக இருந்த போது புதுவையில் ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் புதுச்சேரி நலன்கள் பாதிக்கப்பட்டன. மத்திய மந்திரியாக இருந்த நாராயணசாமி நினைத்திருந்தால் அன்றைக்கே புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்று இருக்கலாம்.

தற்போது போராட வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும். கவர்னரிடம் சண்டை போட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் நாராயணசாமியும், ரங்கசாமியும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டதால் புதுச்சேரி தத்தளித்தது.

தற்போது அரசியல் நிலை மாறிவிட்டது. புதுவை முதல்-அமைச்சராக நாராயணசாமி வந்து விட்டார். ரங்கசாமி மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கொண்டு இங்கே வருகின்ற திட்டங்களை கவர்னரை வைத்து தடுத்து வருகிறார். இதனால் புதுச்சேரியில் காமெடியான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 2 சாமிகளையும் நம்பி வீணாகாமல் புதிய மாற்றத்தை இங்கே உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் தேசிய கட்சிகளை புறக்கணித்து, ஜெயலலிதாவுக்கு வாக்களித்ததால் தான் தமிழகம் தப்பித்துக்கொண்டது. புதுவை மாநிலம் வளர்ச்சியடைய 2 சாமிகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆகவே புதிய மாற்றத்துக்கு அ.ம.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் கட்சியின் புதுவை மாநில செயலாளர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story