தமிழகத்தை வஞ்சிக்கிற பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது - டி.டி.வி.தினகரன் பேச்சு


தமிழகத்தை வஞ்சிக்கிற பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது - டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 13 April 2019 11:00 PM GMT (Updated: 13 April 2019 7:54 PM GMT)

தமிழகத்தை வஞ்சிக்கிற பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கோமுகிமணியனை ஆதரித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை, தியாகதுருகம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மோடி, எடப்பாடி ஆட்சிகளை தூக்கி எரிவதற்கான தேர்தல் 18–ந் தேதி நடக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேரம் பேசி, பேரம் அதிகம் கிடைத்த கட்சியுடன் கூட்டணி வைத்து விட்டு கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு வாக்களித்தால் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியை விற்றுவிடுவார்கள். இவர்கள் வெற்றி பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வந்தவர்கள். இன்னொரு கூட்டணி முரண்பாடான கூட்டணியாக அமைந்துள்ளது. நில அபகரிப்பு வழக்கு அவர்கள் மீது அதிகம் உள்ளது. தமிழகத்தை புறக்கணிக்கும் தேசிய கட்சிகளை இந்த தேர்தலில் நீங்கள் புறக்கணித்து, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கோமுகி மணியனுக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், மாவட்ட தலைவர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் வக்கீல் தங்கதுரை, நகர செயலாளர் நம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் சீனுவாசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பால்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், நகர இணை செயலாளர் பிரபாகரன், ஒன்றிய பொருளாளர் கதிர்வேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அன்பு, பொறியாளர் பிரிவு செயலாளர் மானக் ஷா, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் ராஜி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்தோஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் கணபதியை ஆதரித்து உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் டி.டி.வி.தினகரன் பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஒரு மினி தேர்தலாக நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி கம்பெனி இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும். ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பதவியை காப்பாற்றிக்கொள்ள இன்றைக்கு மோடியிடம் கைகட்டிக்கொண்டு நிற்கின்றனர். ஜெயலலிதாவை தாக்கி பேசியவர்களுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிய சமூகநீதி காத்த போராளி, இன்றைக்கு எந்த அடிப்படையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார். இந்த ஆட்சியில் சட்டம்– ஒழுங்கு சரியில்லை, மக்களுக்கான திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று அன்புமணி, நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரும் மாறிவிட்டார். ஏனெனில் இந்தூரில் உள்ள வழக்குக்கு பயந்து அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சம்மதித்துள்ளார்.

தமிழ்நாட்டை வஞ்சிக்கிற பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. இன்னொரு கூட்டணி பலமான கூட்டணி என்று சொல்லிக்கொள்கிறது. மதவெறியை, சாதி வெறியை தூண்டுகிறவர்களுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். நாம் நிம்மதியாக வாழ சாதி, மதம், பேதமில்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களியுங்கள்.

தேசிய கட்சிகளை நம்பி பலனில்லை என்று 2014–ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு வாக்களித்தீர்கள். அதேபோல் ஜெயலலிதா வழியில் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களியுங்கள். விழுப்புரம் தொகுதி வேட்பாளர் கணபதி, சாதி, மதம், பேதம் பார்க்க மாட்டார். அவருக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story