பறவைக்கு தண்ணீர்


பறவைக்கு தண்ணீர்
x
தினத்தந்தி 14 April 2019 7:55 AM GMT (Updated: 14 April 2019 7:55 AM GMT)

கோடை காலத்தில் மனிதர்களின் தாகத்தை தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுவது வழக்கம். அதுபோல் பறவை இனங்களின் தாகத்தை போக்கும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்கள் கேரள இளைஞர்கள்.

கோடை காலத்தில் மனிதர்களின் தாகத்தை தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுவது வழக்கம். அதுபோல் பறவை இனங்களின் தாகத்தை போக்கும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்கள் கேரள இளைஞர்கள். ஐ.டி. துறையில் பணி புரிபவர்களை ஒருங்கிணைத்து பறவை இனங்களின் தாகத்தை போக்குவதற்கு முன்வருமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதற்காக ‘பேர்டு பாத் சேலஞ்ச்’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள். வீடுகள், வேலை பார்க்கும் இடங்கள், பொது இடங்களில் பறவைகள் தண்ணீர் பருகுவதற்கு ஏதுவாக அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். சமூக வலைத் தளங்கள் மூலம் ஒன்றிணைந்த ஐ.டி. ஊழியர்கள் கொச்சியில் ஒன்றுகூடி பறவைகளுக்கு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

இவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அகன்ற களிமண் பாத்திரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பறவை இனங்களை காக்கும் இவர் களுக்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி குழுவில் இடம்பிடித்துள்ள ஐ.டி. ஊழியர் அனீஷ் பந்தலானி கூறுகையில், ‘‘நாங்கள் வேலை பார்க்கும் வளாகத்தில் ஏராளமான பறவைகள் தண்ணீரை தேடி உலா வந்து கொண்டிருக்கும். அவைகள் சுத்தமான நீரை பருக முடியாத நிலைதான் இருக்கிறது. அவை குளிப்பதற்கும், பருகுவதற்கும் ஏதுவாக தண்ணீருக்கு ஏற்பாடு செய்தோம். முதலில் எங்கள் குழுவை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை வைத்து சோதனை செய்து பார்த்தார்கள். ஆரம்பத்தில் சில நாட்கள் ஒருசில பறவைகளே தண்ணீர் பருகுவதற்கு வந்தது. இப்போது அனைத்து வகையான பறவை இனங்களும் தாகம் தீர்க்க பறந்து வருகிறது’’ என்கிறார்.

மரத்தின் அடிப்பகுதிகள், உயரமான கட்டிடங்கள், சுவர்கள் போன்ற பகுதிகளிலும் தண்ணீர் வைப்பதற்கு தீர்மானித்து இருக்கிறார்கள்.

Next Story