இது ‘கோன்யாக்’ நடனம்


இது ‘கோன்யாக்’ நடனம்
x
தினத்தந்தி 14 April 2019 9:22 AM GMT (Updated: 14 April 2019 9:22 AM GMT)

நாகலாந்து மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் தங்களுடைய பாரம்பரிய நடனங்களை விழா காலங்களில் விமரிசையாக அரங்கேற்றுவது வழக்கம்.

நாகலாந்து மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் தங்களுடைய பாரம்பரிய நடனங்களை விழா காலங்களில் விமரிசையாக அரங்கேற்றுவது வழக்கம். பாரம்பரிய உடை அணிந்து நேர்த்தியாக ஒரே ஸ்டைலில் அலங்காரங்கள் செய்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். அவற்றுள் கோன்யாக் நடனம் பிரபலமானது. இந்த நடனத்தை கோன்யாக் பழங்குடியின பெண்கள் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் ஆலியங் மாங்யூ திருவிழாவில் ஆண்டு தோறும் அரங்கேற்றம் செய்வார்கள்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த திருவிழா கோன்யாக் இன பெண்களை முன்னிலைப்படுத்தி நடக்கும். இந்த ஆண்டு அவர்களது பாரம்பரிய நடனம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. 4,707 பெண்கள் ஒன்றுகூடி பாரம்பரிய உடையில் தோன்றி நடனம் ஆடினார்கள். அப்போது பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்து அதற்கேற்ப நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். கின்னஸ் பதிவில் இடம்பிடிப்பதற்காக இந்த நடனம் 5 நிமிடங்கள் நீடித்தது.

இந்த பாரம்பரிய நடனம் கின்னஸ் சாதனையில் இடம்பெற முயற்சி செய்தவர்களுள் ஒருவரான புகைப்பட கலைஞர் டலி டெம்ஜென், ‘‘கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பதற்கு 5 நிமிடங்களாவது நடனம் தொடர வேண்டும். பெண்கள் ஆர்வமாக இருந்ததால் உற்சாகத்துடன் ஆடி ஐந்து நிமிடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டார்கள். 2500 பெண்களாவது கலந்துகொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தோம். எங்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக 115 கிராமத்தை சேர்ந்த 4707 பேர் ஆர்வமுடன் பங்கேற்றுவிட்டார்கள்.

மூன்றரை மணி நேரம் ஒரே இடத்தில் நிற்பது எளிதான காரியம் அல்ல. அப்படி நிற்கும்போது சோர்வு ஏற்பட்டு விடும். ஆனால் பழங்குடி இன பெண்கள் ஆரம்பத்தில் வெளிப்படுத்திய அதே உற்சாகத்துடன் இறுதி வரை நின்றது ஆச்சரியம் அளித்தது’’ என்கிறார்.

தங்கள் பாரம்பரிய நடனம் உலக சாதனையில் இடம்பிடிக்க வேண்டும் என்று 2016-ம் ஆண்டு முதல் கோன்யாக் பழங்குடியின சங்கம் முயற்சித்து வந்தது. இந்த ஆண்டு அது கைகூடி இருக்கிறது.

Next Story