மொபட் மீது கார் மோதியது; பெண் பலி படுகாயம் அடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை


மொபட் மீது கார் மோதியது; பெண் பலி படுகாயம் அடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 April 2019 3:45 AM IST (Updated: 15 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மொபட் மீது கார் மோதியது. இதில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய கணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி நாகம்மாளுடன்(48) மொபட்டில் விளங்குளம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சேதுபாவாசத்திரம் அருகே சம்பைபட்டினம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் ராமமூர்த்தி, நாகம்மாள் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த நாகம்மாள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். ராமமூர்த்தி மேல் சிகிச்சைக்காக பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story