மேகதாது அணை கட்டுவதற்கு மணல் அனுப்பும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டு


மேகதாது அணை கட்டுவதற்கு மணல் அனுப்பும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 8:31 PM GMT)

‘மேகதாது அணை கட்டுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மணல் அனுப்புகிறார்’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தேனியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தமிழக மக்களுக்கு விரோதமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த அணை கட்டப்படுவதற்கான மணல் அனுப்புவது தேனியில் ஆளும் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் தான். இந்த செய்தியை கேள்விப்பட்டு தமிழக மக்களும், டெல்டா பகுதி விவசாயிகளும் கொதித்துப்போய் உள்ளனர்.

தமிழக மக்களுக்கு எதிராக கர்நாடகத்துக்கு மணல் சப்ளை செய்து, கொள்ளை லாபம் சம்பாதித்து, மக்களுக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது. பணம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள். மேகதாது அணை கட்ட துணைபோகும், ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

தேனிக்கு பிரதமர் வந்த போது, பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களில், பணம் கொடுத்து மக்களை அழைத்து வந்தனர்.

கூட்டத்தில் என்னைப்பற்றி பேசிய மோடி, வெளி ஊர்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். குஜராத்காரரான இவர், உத்தரபிரதேசத்தில் போட்டியிடலாமா? குஜராத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டுக்கேட்கலாமா? ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிடவில்லையா? இப்படி சொல்வது, இந்திய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையைக் குலைக்கும் செயல்.

தேனி தொகுதியில் ஆயிரம் மோடிகள், ஆயிரம் கேடிகள் வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது. நான் எம்.பி.யாக பணியாற்றுவதை விட மக்கள் சேவகனாக பணியாற்ற விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எடுபிடியாக இருக்கிறது. கோடி, கோடியாக பணத்தை குடோன்களில் பதுக்கி வைத்துள்ளனர். அதை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை.

கங்கையைப் போல வைகையை சுத்தப்படுத்துவேன் என்று மோடி சொல்வதெல்லாம் பொய். இப்போதும் வாரணாசியில் சென்று பாருங்கள். அங்கே பிணங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தால் பணம் சுனாமியாக அடிக்கிறது. சுனாமியை சமாளிக்கும் திறன் எங்களிடம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, “மேகதாது அணைக்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் மணல் கொண்டு செல்வதாக சொல்கிறீர்கள். ஆதாரத்தோடு தான் சொல்கிறீர்களா?” என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது தொடர்பாக வார இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். என் மீது வழக்கு போடட்டும், ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். ஜெயலலிதா என் மீது வழக்கு போட்டார். வாய்தா வாய்தாவாக வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு முறையாவது ஜெயலலிதாவை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டார். இப்போது எடப்பாடி என் மீது வழக்கு போட்டிருக்கிறார். எப்படியாவது எடப்பாடியை குறுக்கு விசாரணை செய்வேன்” என்றார்.

Next Story