வெள்ளியங்கிரி வனப்பகுதிக்கு தீர்த்தம் எடுக்க சென்றபோது பரிதாபம் , காட்டு யானை தாக்கி பக்தர் சாவு
வெள்ளியங்கிரி வனப்பகுதிக்கு தீர்த்தம் எடுக்க சென்றபோது காட்டு யானை தாக்கியதில் பக்தர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேரூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செஞ்சேரிமலையை அடுத்த இரண்டாம் பாளையத்தில் மதுரைவீரன் கோவில் உள்ளது. இங்கு நடந்த திருவிழாவுக்காக, தீர்த்தம் எடுப்பதற்காக இந்த கோவிலை சேர்ந்த பக்தர்கள் 9 பேர் நேற்று முன்தினம் இரவு வாகனம் மூலம் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றனர்.
நேற்று காலை 6 மணியளவில் அங்கிருந்து வெள்ளியங்கிரி மலை வனப்பகுதியில் உள்ள ‘மாமரத்து கண்டி’ என்னும் இடத்தில் உள்ள நொய்யல் ஓடையில் தீர்த்தம் எடுக்க சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று அவர்களை திடீரென தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 9 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் அவர்களை காட்டு யானை துரத்தி சென்றது.
இதில் 3 பேர் யானையிடம் வசமாக சிக்கி கொண்டனர். அவர்களை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த அவர்களை காலால் மிதித்து துதிக்கையால் மீண்டும் தூக்கி வீசியது. இதை தூரத்தில் இருந்து பார்த்த மற்ற 6 பேரும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். சிறிது நேரம் அங்கு சுற்றித்திரிந்த காட்டு யானை திடீரென 6 பேர் நின்றிருந்த பகுதியை நோக்கி ஓடி வந்தது. இதனால் பதறிப்போன அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி முழங்காடு சோதனைச்சாவடியில் உள்ள வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினரும், ஆலாந்துறை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது கோவை பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி (வயது 60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிவானந்தம் (63), துரைசாமி (60) ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று கோவில் திருவிழாவுக்காக தீர்த்தம் எடுக்க சென்ற பக்தரை காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story