வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 April 2019 10:00 PM GMT (Updated: 14 April 2019 10:14 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை கலெக்டர் டி.ஜி.வினய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை அறை திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

18-ந்தேதி மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் என அனைத்தும் இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும். பின்னர் அடுத்த மாதம் (மே) 23-ந்தேதி அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நிலையில் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை ஆகியவற்றை கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் அந்த அறைகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர் சுதேஷ்குமார் மோக்தா, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story