இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் கலெக்டர் ரோகிணி உத்தரவு


இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் கலெக்டர் ரோகிணி உத்தரவு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 5:14 PM GMT)

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

சேலம், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், அவர்களை சார்ந்தோர் இன்று மாலையுடன் தங்களது பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது.

சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், சத்திரங்கள் போன்ற இடங்களை வாக்காளர்கள் வாக்கு சேகரிக்கும் விதமாக பயன்படுத்தக்கூடாது. தேர்தல் தொடர்பான பிரசாரங்கள், பயணங்கள் ஆகியவற்றுக்கு வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் பிரசாரம் ஓய்வதால் அந்தந்த தொகுதி வாக்காளர்களை தவிர, மற்ற நபர்கள், வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் போன்றவற்றிலும் வெளி ஆட்கள் யாரையும் தங்க வைக்கக்கூடாது.

பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் வரப்பெற்றவுடன் ஒருசில நிமிடங்களில் பறக்கும் படை குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக அந்த குழுக்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story