பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வாணியாறு அணையின் கால்வாய்களை நீட்டிக்க நடவடிக்கை எடுப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி வாக்குறுதி
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வாணியாறு அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாயை நீட்டிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரம் செய்து ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார். இதனிடையே வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி தர்மபுரி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மிட்டாரெட்டி அள்ளி உள்பட பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி பேசியதாவது:-
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால் தொகுதி மக்களுக்கு என்றும் நன்றி கடன் பட்டவனாக கடமையாற்றுவேன். தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை பொதியன்பள்ளம் அணைக்கட்டிற்கு கொண்டு வர பாடுபடுவேன். வாணியாறு அணையின் வலது, இடதுபுற கால்வாய்களை நீட்டிக்க நடவடிக்கை எடுப்பேன். ஒகேனக்கல் காவிரி ஆற்று உபரிநீரை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஏரிகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் நவீன வசதியுடன் கூடிய கழிப்பறைகள் ஏற்படுத்தி கொடுப்பேன். தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க பாடுபடுவேன். அனைத்து குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை உறுதி செய்வேன். கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் ஏழைகளுக்கு இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது ஒன்றிய செயலாளர் விசுவநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, பா.ம.க. மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி, அ.தி.மு.க. விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் உலகமாதேஸ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பா.ஜனதா மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story