இறுதிக்கட்ட பிரசாரத்தையொட்டி சேலம் கடைவீதிகளில் நடந்து சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு - பொதுமக்கள், வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார்


இறுதிக்கட்ட பிரசாரத்தையொட்டி சேலம் கடைவீதிகளில் நடந்து சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு - பொதுமக்கள், வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார்
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 8:33 PM GMT)

சேலம் கடைவீதிகளில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று அ.தி.மு.க.வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அவர் ஆதரவு திரட்டினார்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22-ந் தேதி சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்துவிட்டு கள்ளக்குறிச்சி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து அவர் கடந்த 25 நாட்களாக தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

கடந்த சில நாட்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தங்கியிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் நேற்று காலை சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று காலை சுமார் 10.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சேலம் பட்டைக்கோவில் அருகே வந்தார். பின்னர் அவர் அங்குள்ள சின்னக்கடை வீதியில் நடந்து சென்று அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.

பின்னர், அந்த வீதியில் இருபுறங்களிலும் இருந்த மளிகைக்கடை, பேன்சி ஸ்டோர், காய்கறிக்கடைகள், பழக்கடைகள், ஜவுளிக்கடைகள் என அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்த கடையின் உரிமையாளரிடம், வியாபாரம் எப்படி இருக்கிறது?, லாபம் எவ்வளவு கிடைக்கும்? என்ற விவரங்களை கேட்டறிந்து துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார்.

காய்கறி கடைக்கு சென்று வாக்கு சேகரித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த பெண்ணிடம், கத்தரிக்காய், தக்காளி கிலோ எவ்வளவு? என்று கேட்டார். அப்போது அந்த பெண் கத்தரிக்காய், தக்காளி கிலோ ரூ.40 என்று கூறினார். மேலும் அவர் அங்கு வந்த மூதாட்டி ஒருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அவரிடம் கனிவாக பேசி முதல்-அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

முதல்-அமைச்சருக்கு வழிநெடுக ஏராளமான பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தனர். சிலர் அவர் மீது பூக்களை தூவினர். ஆளுயர மாலை, சால்வைகள் அவருக்கு அணிவிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்து சென்று அந்த வீதியில் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடை வீதியில் இருந்த ஒரு டீக்கடைக்கு சென்றார். அங்கு டீக்குடித்து கொண்டிருந்த பொதுமக்களிடம் அவர் துண்டு பிரசுரம் வினியோகித்து வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். மேலும் அங்கு டீ மாஸ்டராக பணியாற்றும் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரிடம் காபி போட்டு கொடுக்குமாறு கேட்டார்.

அவரும் முதல்-அமைச்சருக்கு காபி போட்டு கொடுத்தார். அப்போது காபி குடித்துக் கொண்டே முருகனிடம், ஒரு நாளைக்கு எவ்வளவு டீ விற்பனை செய்யப்படுகிறது, லாபம் எப்படி கிடைக்கிறது, உனக்கு சம்பளம் எவ்வளவு? என்ற விவரங்களை கேட்டார். அதற்கு முருகன், நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை டீ விற்பனை நடக்கிறது என்றும், எனக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.700 கிடைக்கிறது என்றும் கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி காபி சூப்பராக இருக்கிறது என்று கூறி அவரை பாராட்டி ரூ.200 கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story