பிரசாரத்தில் முதல்-அமைச்சர் பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ: தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம் சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி


பிரசாரத்தில் முதல்-அமைச்சர் பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ: தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம் சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 5:46 PM GMT)

சேலத்தில் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து அனுப்பும் பணிகள் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடந்தது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணி பார்வையிட்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 28 லட்சத்து 95 ஆயிரத்து 47 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் ஆண்கள் 14 லட்சத்து 47 ஆயிரத்து 720 பேர். பெண்கள் 14 லட்சத்து 47 ஆயிரத்து 192 பேர். இதர வாக்காளர்கள் 135 பேர் அடங்குவர்.

தேர்தல் பணியில் 15 ஆயிரத்து 784 பேர் ஈடுபடுகிறார்கள். மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 172 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஜருகுமலை உள்பட 46 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் போதுமான சாலை வசதிகள் உள்ளன. இதனால் தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்படாது. பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவ வீரர்கள் முன்னிலையில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் அடுத்த சிலமணி நேரங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சேலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு பெண்ணுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதுபற்றி உங்களிடம் யாரேனும் புகார் தெரிவித்தார்களா? என்று கலெக்டரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கலெக்டர் ரோகிணி கூறும்போது, சேலத்தில் ஓட்டுக்கு முதல்- அமைச்சர் பணம் கொடுத்ததாக இதுவரை புகார்கள் வரவில்லை. ஆனால், ஊடகங்களில் வந்துள்ள செய்தியின் அடிப்படையில் இதுபற்றிய விவரத்தை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Next Story